சொந்த வாகனத்தை வாடகைக்கு பயன்படுத்துவதை தடுக்க வேண்டும்
நாமக்கல், ஜூலை 15: நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், சுற்றுலா வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் சங்கத்தினர் கலெக்டர் துர்காமூர்த்தியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அதில் கூறியிருப்பதாவது:
ராசிபுரம், சேந்தமங்கலம், பரமத்திவேலூர் மற்றும் திருச்செங்கோடு பகுதிகளில், சொந்த பயன்பாட்டுக்கு வாங்கிய வாகனங்களை வாடகை வாகனமாக இயக்குவது, கடந்த ஆண்டை காட்டிலும் அதிகரித்து உள்ளது. இதுபற்றி வட்டார போக்குவரத்து அலுவலரிடம் தெரிவித்தால், வாகனத்தில் வரும் பயணிகள் வாடகைக்கு தான் எடுத்து வருகிறோம் என்று கூறினால் தான் அபராதம் விதிக்க முடியும் என்கிறார்.
இதே நிலை நீடித்தால், தற்போது நடைமுறையில் உள்ள வாடகை வாகனங்கள் அனைத்தும், சொந்த பயன்பாட்டு வாகனமாக மாற்றி, வாடகைக்கு இயக்கப்படும் சூழ்நிலை உருவாகும். எனவே, உரிய நடவடிக்கை எடுத்து, வாடகை வாகனம் வைத்திருக்கும் எங்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.