பாலக்காடு அருகே வெவ்வேறு சம்பவத்தில் பைக் மீது லாரி மோதல் வாலிபர்கள் இருவர் பலி
பாலக்காடு,ஜூலை9: கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் பழயனூரை சேர்ந்தவர் அகில் (30). தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று முன்தினம் மாலை பைக்கில் வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது எதிரே சிமெண்ட் கலவை லாரி அகில் சென்ற பைக் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அகிலை அருகில் இருந்தவர்கள் மீட்டுதிருச்சூர் அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனில்லாமல் அகில் உயிரிழந்தார். முளங்குன்னத்துக்காவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோன்று இடுக்கி மாவட்டம் தோப்பிராம்குடியை அடுத்த நெல்லானிக்கல் பகுதியைச் சேர்ந்த தங்கச்சன் மகன் அபிஜித் (24). சுங்கத்தில் உள்ள தனியார் கம்பெனி சூபர்வைசர். இவரும் நேற்று வேலை முடிந்து பைக்கில் வீடு திரும்பிய போது அங்கமாலி அருகே வாப்பாலசேரியில் முன்னாள் சென்ற லாரி மீது பைக் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.அங்கமாலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நிறுத்தாமல் சென்ற லாரியை சி..சி.டி.வி., கேமராக்கள் மூலமாக போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். விபத்தில் உயிரிழந்த அபிஜித்திற்கு ஜலஜா என்கிற தாயாரும், ஆர்யாமோள், அர்ச்சனா என்கிற இரு தங்கையினரும் உள்ளனர்.