கள்ளக்குறிச்சி - துருகம் சாலை பகுதியில் லாரி ஆயில் கொட்டியதால் இருசக்கர வாகன ஓட்டிகள் வழுக்கி விழுந்து பாதிப்பு
கள்ளக்குறிச்சி, ஜூலை 9: கள்ளக்குறிச்சி பஸ் நிலையம் அருகே துருகம் சாலை பகுதியில் நேற்று இரவு 7 மணியளவில் நான்குமுனை சந்திப்பு நோக்கி சென்ற லாரியில் இருந்து ஆயில் கசிந்து வெளியானது. அதனையடுத்து அந்த லாரியானது பஸ்நிலையம் நுழைவுவாயில் எதிரே பழுதாகி நின்றது. பின்னர் ஆயில் கசிவு சரிசெய்த பின்னர் லாரியை எடுத்து சென்றனர். லாரியில் இருந்து வெளியேறிய ஆயில் சுமார் 300 மீட்டர் தூரத்திற்கு சாலையில் ஆயில் கொட்டியதால் அந்த சாலை வழியாக சென்ற 10க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையில் வழுக்கி கீழே விழுந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் கள்ளக்குறிச்சி போலீசார் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஆயில் பசை வழுக்கு தன்மையை குறைப்பதற்கு தண்ணீரில் பவுடர் கலந்து சாலை முழுவதும் தெளித்தனர். அதனையடுத்து வாகன ஓட்டிகள் அச்சமின்றி சாலையில் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.