கும்மிடிப்பூண்டி: எளாவூர் சோதனை சாவடியில் நேற்று காலை 11 மணியளவில் திடீரென லாரி ஒன்றின் முன்பக்கத்தில் தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதை அறிந்த சக ஓட்டுனர்கள் காவல்துறை மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். ஆரம்பாக்கம் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தியதில், அந்த லாரி தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து உப்பு ஏற்றுக்கொண்டு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திற்குச் சென்ற லாரி என்பது தெரிய வந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக லாரிக்குள் இருந்த உப்பு பொருட்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.