லால்குடி நகராட்சி கூட்டம் இறைச்சி கடைகளில் ஆய்வு மேற்கொள்ள வலியுறுத்தல்
லால்குடி, அக். 31: லால்குடி பகுதியில் உள்ள இறைச்சி கடைகள் சுகாதாரமாக செயல்படுகிறதா? என சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகர் மன்ற கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. திருச்சி மாவட்டம் லால்குடி நகராட்சியில் நகர் மன்ற கூட்டம் நகர்மன்ற தலைவர் துரைமாணிக்கம் தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையர் புகேந்திரி முன்னிலை வகித்தார். துப்புரவு ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி அறிக்கை வாசித்தார்.
லால்குடி நகராட்சி பகுதிகளில் சுற்றி திரியும் நாய்களை பிடிக்க முன்வர வேண்டும், வடிகால் வசதி அமைத்திட வேண்டும், நகராட்சி பகுதியில் ஆங்காங்கே நடைபெற்று வரும் இறைச்சி கடைகளை ஒரே இடத்தில் செயல்பட்டால் பொது மக்களுக்கு பெரிதும் வசதியாக இருக்கும், மேலும் ஆங்காங்கே செயல்பட்டு வரும் பல்வேறு இறைச்சி கடைகள் சுகாதாரமான இறைச்சியை பொது மக்களுக்கு வழங்குகிறார்களா? என சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு மக்கள் பிரச்சினைகள் குறித்து கவுன்சிலர்கள் பேசினர். கூட்டத்தில் நகர மன்ற உறுப்பினர்கள் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
