திருச்சி உறையூர் மீன் மார்க்கெட்டில் திடீர் தீ விபத்து
திருச்சி, ஆக.27: திருச்சி உறையூர் குழுமணி சாலையில் காசி விளங்கி மொத்த மீன் விற்பனை மார்க்கெட் உள்ளது. திருச்சி மாவட்டத்திற்கு மொத்தமாக கொண்டு வரப்படும் மீன்கள், இந்த மார்க்கெட்டில் இருந்து மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. பின்னர் சிறு வியாபாரிகள் இங்கிருந்து வாங்கி சென்று கிராமப்புறங்களில் விற்பனை செய்கின்றனர். இந்நிலையில் இம்மார்க்கெட்டில் நேற்று அதிகாலை 2 மணியில் இருந்து இந்த மார்க்கெட்டின் பின் புறத்தில் போடப்பட்டு இருந்த குப்பைகள் மற்றும் தெர்மாகோல் போன்ற கழிவு பொருட்கள் நேற்று திடீரென தீப்பிடித்து எரிந்தன.
குபுகுபுவென அதிக ஜுவாலையுடன் தீ எரிந்து கொண்டிருந்ததால் மீன் வியாபாரிகள் மற்றும் மீன் வாங்குவதற்காக வந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி திருச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் உடனடியாக அங்கு வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், தீ விபத்திற்கான காரணம் பற்றி உறையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறனர்.