முதியவரை தாக்கியவர் கைது
திருச்சி, ஆக.21: திருச்சியில் முதியவர் மற்றும் அவரது குடும்பத்தினரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருச்சி சண்முகா நகர் பகுதியை சேர்ந்தவர் அன்புச்செழியன் (62). இவர் சீனிவாச நகர் பகுதியில் போட்டோ ஸ்டுடியோ நடத்தி வருகிறார். கடந்த 18ம் தேதி கடைக்கு வந்த ஒரு வாலிபர் இவரிடம் சில புகைப்படங்களை நகல் எடுத்து தரும்படி கேட்டார். போட்டோ நகல் எடுக்க சற்று தாமதமானதாக கூறப்படுகிறது.
இதனால் சிறிது நேரம் கழித்து வந்து அந்த புகைப்படங்களை வாங்கிக் கொள்வதாக கூறிவிட்டு சென்றார். மீண்டும் திரும்பி வந்தபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் அந்த வாலிபர் அன்புச் செழியனை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினாராம். இதுகுறித்து கேட்ட அவரது மனைவி மற்றும் மகளையும் தாக்கியுள்ளார். இதுகுறித்து திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிந்து புத்தூர் பகுதியைச் சேர்ந்த பரணி குமார் (25) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.