துறையூர் அருகே அம்மன் கோயில் உண்டியல் திருட்டு
துறையூர், நவ.19: துறையூர் அடுத்த செங்காட்டுப்பட்டி காந்திபுரம் கோயில் பூட்டை உடைத்து உண்டியல திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள செங்காட்டுப்பட்டி காந்திபுரம் காலனி பகுதியில் மகாசக்தி மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் பூசாரியாக அதே கிராமத்தை சேர்ந்த ரத்தினம் (65) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் கோயிலை பூட்டிவிட்டு சென்ற ரத்தினம், நேற்று காலை கோயிலுக்கு வந்தார்.
அப்போது கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, உண்டியலை திருடி சென்ற மர்ம நபர்கள், கோயிலின் பின்புற பகுதியில் செடி மறைவில் வைத்து திறந்து அதிலிருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து பூசாரி ரத்தினம் துறையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் அங்கு சென்ற துறையூர் போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.