அருந்ததியர் மக்களுக்கு வழங்கப்பட்ட இலவச மனைப் பட்டாக்களை திரும்ப பெற்றுத்தர வேண்டும்
திருச்சி, நவ.18:அருந்ததியர் வகுப்பு மக்களுக்கு, கடந்த 1997ம் ஆண்டு அளிக்கப்பட்ட இலவச வீட்டு மனைகள் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில், மாவட்ட கலெக்டர் தலையிட்டு வீட்டு மனை பட்டாக்களை திரும்ப பெற்றுத்தர வேண்டும் என மனை ஒதுக்கீடு பெற்ற மக்கள், மாவட்ட கலெக்டரிடம் நேற்று கோரிக்கை மனு அளித்தனர். திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், முருகேசன் என்பவர் தலைமையில் திரண்ட அருந்ததியர் வகுப்பை சேர்ந்த 80க்கும் மேற்பட்ட பெண்கள் அளித்த மனுவில் தெரிவித்திருந்ததாவது: திருவெறும்பூர் வட்டம் பூலாங்குடி காலனி, பர்மா காலனி, பீம நகர், கூனி பஜார் பகுதிகளில் வசித்து வந்த வறுமையில் வாடி வரும் வீடற்ற அருந்ததியர் குடும்பங்களுக்கு, கடந்த 1997ம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் காந்தளூர் கிராமத்தில் நிலம் கையகப்படுத்தப்பட்டு, இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டது.
இருப்பினும் நிலத்தை பிரித்து அளந்து கொடுக்கவில்லை. இதனால் பட்டா பெற்ற மக்கள் அங்கு குடியேற இயலவில்லை. இந்நிலையில் மக்கள் குடியேறாத காரணத்தால், வழங்கப்பட்ட அனைத்து மனைகளுக்கான பட்டாக்களும் ரத்து செய்யப்பட்டதாக தெரிகிறது. எனவே மாவட்ட கலெக்டர் இப்பிரச்சினையில் தலையிட்டு, அருந்ததியர் வகுப்பை சேர்ந்த மக்களுக்கு மீண்டும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மனைகளை மீண்டும் பெற்றுத்தர வேண்டும் என அந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.