உப்பிலியபுரம் அருகே காணாமல் போன விவசாயி கிணற்றில் சடலமாக மீட்பு
துறையூர், அக்.18:உப்பிலியபுரம் அருகே காணாமல் போன விவசாயி கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அருகே வைரிசெட்டிப்பாளையத்தை சேர்ந்த ராமசாமி மகன் நடராஜன் (45). விவசாயி. இவரது மனைவி சுகந்தி. கடந்த 15ம் தேதி வயலுக்கு சென்ற நடராஜன் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது மனைவி சுகந்தி மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இதுபற்றி சுகந்தி உப்பிலியபுரம் போலீசில் 16ம்தேதி புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், அவரது உறவினர் கலைச்செல்வன் வயலுக்குச் சென்று தேடிப்பார்த்தார். அப்போது கிணற்றில் நடராஜன் சடலமாக மிதந்தது தெரிந்தது. உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத்துறையினர் நடராஜன் உடலை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.