திருச்சியில் சரக்கு வாகனத்தை திருடிய 2 பேர் கைது
திருச்சி, செப்.11: திருச்சி திருவானைக்காவல் பகுதியில் சரக்கு வாகனத்தை திருடிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். திருச்சி திருவானைக்காவல் கன்னிமார்த் தோப்பு பகுதியை சேர்ந்தவர் மணிமாறன்(31). இவர் அப்பகுதியில் செங்கல்சூளை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த செப்.8ம் தேதி இவரது சரக்கு வாகனத்தை கன்னிமார்த்தோப்பு பகுதியில் நிறுத்தி வைத்திருந்தார்.
அப்போது 3 மர்ம நபர்கள் சரக்கு வாகனத்தை திருடி சென்றனர். உடனே மணிமாறன் ஜிபிஎஸ் கருவியை பயன்படுத்தி திருடிய நபர்கள் கல்லணை சாலையில் வாகனத்துடன் இருப்பதை கண்டு, ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து லால்குடி தாளக்குடி பகுதியை சேர்ந்த கிரண்குமார் (23), லால்குடி எசனக்கோரை பகுதியை சேர்ந்த சுந்தர் (31) ஆகிய 2 பேரை கைது செய்து அவரிகளிடமிருந்த சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய நவீன் குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.