டூவீலரில் செல்வோரை கடிக்க துரத்துகிறது நாய்கள் தொல்லை அதிகரிப்பு
சமயபுரம், செப்.10: மண்ணச்சநல்லூர் பகுதியில் 18 வார்டுகள் உள்ளது. இதில் ஒவ்வொரு வார்டுகளிலும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடைவீதியில் உள்ள முக்கிய சாலையில் மாணவ, மாணவிகள், முதியோர்கள், மருத்துவமனைக்கு செல்பவர்கள் என நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் சென்று வருகின்றனர். மேலும், நடந்து செல்பவர்கள், இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் அதிகளவில் பயன்படுத்தும் இந்த முக்கிய சாலையில் அதிகளவில் தெருநாய்கள் சுற்றித் திரிகின்றன.
தெரு நாய்களால் அந்த வழியாகச் செல்லும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதில் குழந்தைகள் மற்றும் முதியோர்களை தெரு நாய்கள் துரத்திக் கடிப்பதால் அதிக பாதிப்பு ஏற்படுகிறது.மேலும் இந்த நாய்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே சாலைகளில் சுற்றித் திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோ ரிக்கை வைத்துள்ளனர்.