சம்பா சாகுபடி விறுவிறுப்பு மணப்பாறை அருகே கிணற்றில் தவறி விழுந்த குள்ளநரி பத்திரமாக மீட்பு
மணப்பாறை, அக்.9: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கிணற்றில் தவறி விழுந்த குள்ளநரி, நேற்று தீயணைப்புத்துறை வீரர்களால் பத்திரமாக உயிருடன் மீட்கப்பட்டது.மணப்பாறை அடுத்த வெள்ளைக்கல் காசாநகரை சேர்ந்தவர் கோபால் மகன் இளையராஜா(32). இவர் கேஸ் சிலிண்டர் விநியோகம் செய்யும் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று காலை அவருக்கு சொந்தமான சுமார் 80 அடி ஆழ கிணற்றில் 60 அடி வரை தண்ணீர் இருந்த நிலையில், அருகே வீரமலை பகுதியிலிருந்து வழிதவறி வந்த குள்ள நரி ஒன்று தவறி கிணற்றில் விழுந்துள்ளது. கிணற்றில் தவறி விழுந்த நரி, கிணற்றின் உள்சுவர் பகுதியின் திட்டில் சுற்றி சுற்றி ஓடி வந்து கிணற்றுலிருந்து வெளியேற முயன்றது. ஆனால் கிணற்றில் சுவர் சுமார் 10க்கு மேல் இருந்ததால் நரியால் வெளியே செல்ல முடியாமல் தவித்துக்கொண்டிருந்தது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற மணப்பாறை வனத்துறை மற்றும் தீயணைப்புத்துறை வீரர்கள், நரியை பிடிக்க முயன்றனர். ஆனால் கிணற்றின் திட்டில் ஓடிஓடி சென்ற நரி, கிணற்றின் நீர் மட்டத்திலிருந்த மோட்டார் அறையின் அடிப்பகுதியில் சென்று பதுங்கியது. சிறிது நேர போராட்டத்திற்கு பிறகு தண்ணீரில் விழுந்து தத்தளித்த நரியை தீயணைப்புத்துறை வீரர்கள் லாவகமாக தூண்டி மூலம் பிடித்து மேலே கொண்டு வந்தனர். நரியின் கழுத்திலிருந்து தூண்டி அவிழ்க்கப்பட்ட அடுத்த வினாடி தீயணைப்புத்துறை வீரர்கள் பிடியிலிருந்து தப்பித்து குள்ளநரி அருகிலிருந்த வனப்பகுதியினை நோக்கி ஓடி மறைந்தது.