ரங்கம் கோயில் காணிக்கை 1.05 கோடி
திருச்சி, அக்.9: ரங்கம் ரங்கநாதர் கோயில் காணிக்கையாக ரூ.1 கோடியே 5 லட்சத்து 15 ஆயிரம் பெறப்பட்டுள்ளது. 108 வைணவ தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என போற்றப்படுவதுமான ரங்கம் ரங்கநாத சுவாமி கோயிலில் தினமும் தமிழ்நாடு, வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். அவ்வாறு வருகை தரும் பக்தர்கள் கோயிலில் வைக்கப்பட்டிருக்கும் உண்டியல்களில் தங்கள் காணிக்கைகளை செலுத்திவிட்டு செல்கின்றனர். அந்த காணிக்கைகள் பிறதி மாதம் கோயில் நிர்வாகம் சார்பில் எண்ணப்பட்டு கோயில் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். அந்த வகையில் நேற்று கோயிலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து உண்டியல்களும் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டது. இதில் கோயில் பணியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் கோயில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதில் ரூ.1 கோடியே 5 லட்சத்து 15 ஆயிரத்து 905 காணிக்கையாக பெறப்பட்டது. மேலும் தங்கம் 133.1 கிராம், வெள்ளி 2 ஆயிரத்து 321 கிராம் மற்றும் 304 கரன்சிகள் பெறப்பட்டது. இந்த உண்டியல் எண்ணும் பணியின்போது கோயில் இணை ஆணையர் சிவராம் குமார் மற்றும் கோயில் பணியாளர்கள் இருந்தனர்.