திருச்சி தலைமை அஞ்சல் அலுவலகத்தில் சிறப்பு கைத்தறி கண்காட்சி, விற்பனை
திருச்சி, ஆக.7: திருச்சி மற்றும் துறையூர் தலைமை அஞ்சல் அலவலக வளாகங்களில், தேசிய கைத்தறி வாரத்தை முன்னிட்டு, 11வது கைத்தறி தின கண்காட்சி மற்றும் சிறப்பு விற்பனை, கைத்தறி துறை மற்றும் அஞ்சல் துறை இணைந்து நேற்று நடத்தின. கண்காட்சியை மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவர் நிர்மலா தேவி துவக்கி வைத்தார். கைத்தறி துறை உதவி இயக்குநர் ரவிக்குமார், காதி கிராப்ட் உதவி இயக்குநர் சுபா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கைத்தறி உற்பத்தி பொருட்கள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதன் அடிப்படையில் இந்த கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை நடத்தப்பட்டது. இக்கண்காட்சியில் பல்வேறு ரகங்களில் கைத்தறி புடவைகள் மற்றும் ஆண்களுக்கான உடைகள், சோப்பு, தேன், தலையணைகள், தலையணை உறைகள் உள்ளிட்ட கைத்தறி மற்றும் கைவினை பொருட்கள் விற்பனைக்காக இடம் பெற்றிருந்தன.
பிரபல மணமேடு கைத்தறி புடவைகளும் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.இதே போன்ற கண்காட்சியை ஸ்ரீரங்கம் கோட்டம் துறையூர் தலைமை அஞ்சல் அலவலகத்திலும் அஞ்சலக கண்கானிப்பாளர் ஜோஷ்பின் சில்வியா நேற்று காலை துவக்கி வைத்தார்.