கொள்ளிடம் பகுதியில் 75 கிலோ குட்கா கடத்தல்
திருச்சி, நவ. 6: திருச்சியில் 75 கிலோ குட்கா கடந்திய நபரை கைது செய்த போலீசார், கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்துள்ளனர். திருச்சி மாவட்டம் கொள்ளிடம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட தாளக்குடி பகுதியில் குட்கா பொருட்கள் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் போலீசாருக்கு கிடைத்தது. இதையடுத்து கொள்ளிடம் இன்ஸ்பெக்டர் வீரபாண்டியன் மற்றும் போலீசார், கொள்ளிடம்-லால்குடி சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது லால்குடி நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது.
சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் தென்பட்ட அந்த காரை போலீசார் நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது காரின் டிக்கியில் 75 கிலோ குட்கா மறைத்து கடத்தப்பட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து வாகனத்தை ஓட்டி வந்த லால்குடி கொப்பாவளியை சேர்ந்த சிவாஜி ராஜா(37) என்பவரை கைது செய்த போலீசார், கடத்தலுக்கு பயன்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.