திருவெறும்பூர் அருகே லாரி மீது அரசு பேருந்து மோதி டிரைவர் படுகாயம்
திருவெறும்பூர், நவ.5: திருவெறும்பூர் கணேசா மேம்பாலத்தில் செங்கல் லாரி மீது அரசு டவுன் பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் டிரைவர் படுகாயம் அடைந்தார். திருச்சி பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து துவாக்குடிக்கு, அரசு டவுன் பஸ் சென்று கொண்டிருந்தது. அரசு பஸ்சை நம்பர் ஒன் டோல்கேட் மாருதி நகர் பகுதியை சேர்ந்த மதுரை வீரன் என்பவரின் மகன் ஜெகன்மோகன் ஓட்டிச்சென்றார். திருவெறும்பூர் கணேசா புதிய மேம்பாலத்தில் பஸ் சென்று கொண்டிருந்த போது, தஞ்சை நோக்கி சென்று கொண்டிருந்த செங்கல் லாரியின் பின்புறம் மோதியது.
இதனால் அரசு பஸ்சின் முன்புறம் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் பஸ் டிரைவர் ஜெகன் மோகன் இடிபாடுகளுக்குள் சிக்கி கால் முறிவு ஏற்பட்டது. பொதுமக்கள் அவரை மீட்க முயன்றனர். ஆனால் முடிய வில்லை. இது குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையில் மீட்பு படையினர் அங்கு வந்து இடிபாடுகளுக்குள் சிக்கி தவித்த பஸ் டிரைவரை மீட்டனர். பின்னர் ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனையில் கொண்டு சென்று டிரைவர் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.