துவரங்குறிச்சி, மணப்பாறையில் கனமழை கொட்டி தீர்த்தது
துவரங்குறிச்சி, அக்.4: துவரங்குறிச்சி வையம்பட்டி, மணப்பாறை பகுதிகளில் திடீரென இடி மின்னலுடன் கொட்டித் தீர்த்த கனமழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி , மணப்பாறையில் நேற்று காலை முதல் மாலை வரை வெப்பத்தின் தாக்கம் அதிகளவில் இருந்தது. வெப்பக்காற்று வீசியதால் மக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகினர்.
இந்நிலையில் நேற்று இரவு திடீரென மழை பெய்யத் தொடங்கியது. சிறிது நேரத்தில் இடி, மின்னல் காற்றுடன் கனமழை சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. மணப்பாறை, வையம்பட்டி, துவரங்குறிச்சி, ஆலத்தூர், மலையடிப்பட்டி, தாமஸ் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இந்த கனமழை நீடித்தது.
இதனால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பேருந்து நிலையம் முன்பு தாழ்வான பகுதியில் மழைநீர் குளம்போல் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகினர். மேலும் திடீரென பெய்த மழையால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், சம்பா விவசாய பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு இம்மழை பேருதவியாக இருந்தது.