திருச்சி எ.புதூரில் ஆடு திருட முயன்ற 2 வாலிபர் கைது
திருச்சி, நவ.1: திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் ஆடுகளை திருட முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். திருச்சி எடமலைப்பட்டி புதூர் மேலவடக்கு தெருவை சேர்ந்தவர் தருண்குமார்(22). இவர் ஆடு, மாடுகளை வளர்த்து வந்தார். அக்.30ம் தேதி மதியம் எடமலைப்பட்டி புதூர் கீழ வடக்கு வீதி அருகே உள்ள காலியான இடத்தில் இவரது ஆடு, மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது, 2 மர்ம நபர்கள் ஒரு ஆட்டோவில் வந்து, ஆடுகளை ஆட்டோவில் ஏற்றினர்.
அப்போது அங்கிருந்த பொதுமக்கள் கூச்சலிட்டதும் ஆடுகளை கீழே இறக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்குப்பதிந்து பாலக்கரை கெம்ஸ்டவுன் சவேரியார் கோவில் தெருவை சேர்ந்த நெல்சன் (31) மற்றும் அதே பகுதியை சேர்ந்த ஹரிஷ் சகாயராஜ் (33) இருவரை கைது செய்து அவரிடம் இருந்த ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.