திருச்சி அருகே ரூ.1500 லஞ்சம் வாங்கிய மி.வா ஆய்வாளர் கைது: லஞ்ச ஒழிப்புதுறை போலீசார் அதிரடி
தா.பேட்டை,செப்.30: திருச்சி அருகே ரூ.1500 லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஆய்வாளரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா வேலம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்தையா. கால்நடை மருத்துவராக உள்ள இவர், தனது வீட்டுமனையில் வீடு கட்டும்போது தற்காலிக மின் இணைப்பு பெற்று பயன்படுத்தியுள்ளார். தற்போது வீடு கட்டும் பணி முடிவடைந்த நிலையில் தற்காலிக மின் இணைப்பை நிரந்தர மின் இணைப்பாக மாற்றி தருமாறு மின்வாரிய அலுவலகத்தில் மனு அளித்திருந்துள்ளார்.
இந்த மனுவினை விசாரித்த தா.பேட்டை மின்வாரிய வணிக ஆய்வாளர் சரவணன் (56), கால்நடை மருத்துவர் முத்தையாவிடம் நிரந்தர மின் இணைப்பாக மாற்றி தர ரூ.1500 லஞ்சம் கேட்டுள்ளார். இதில் லஞ்சம் கொடுக்க விரும்பாத முத்தையா திருச்சி லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரிடம் புகார் செய்துள்ளார். போலீசார் வழங்கிய ஆலோசனை பேரில் நேற்று அலுவலகத்தில் இருந்த மின்வாரிய வணிக ஆய்வாளர் சரவணனிடம் ரூ.1500 லஞ்ச பணத்தை முத்தையா கொடுத்துள்ளார். அப்போது மறைந்திருந்த டிஎஸ்பி மணிகண்டன், இன்ஸ்பெக்டர்கள் சக்திவேல், பாலமுருகன் உள்ளிட்ட போலீசார், சரவணனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இதுதொடர்பாக போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.