காட்டுப்புத்தூர் பேரூராட்சியில் வார்டு சபா சிறப்பு கூட்டம்
தொட்டியம், அக்.29: காட்டுப்புத்தூர் தேர்வுநிலை பேரூராட்சியில் உள்ள வார்டுகளில் வார்டு அளவிலான சிறப்பு கூட்டங்கள் நடைபெற்றது.
திருச்சி கலெக்டர் அறிவுறுத்தலின் பேரில் நடைபெற்று வரும் சிறப்பு கூட்டத்திற்கு அந்தந்த வார்டு உறுப்பினர்கள் தலைமை வகித்தனர். செயல் அலுவலர் கார்த்திகேயன், இளநிலை உதவியாளர் மதன்குமார், வரித்தண்டலர் இமயவரம்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு கூட்டத்தின் நோக்கம் குறித்து பேரூராட்சி அலுவலர்கள் பொதுமக்கள் மத்தியில் விரிவாக எடுத்துரைத்தனர். அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் சேவைகளை மேம்படுத்தும் நோக்குடன் பொதுமக்களின் கோரிக்கைகள் பெறப்பட்டு முதல்வரின் முகவரி தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு முன்னுரிமை அடிப்படையில் உடனடியாக தீர்வு காணும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டது. வார்டு சபா கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் பகுதியில் உள்ள அடிப்படை தேவைகள் குறித்து விவாதித்தனர்.