வீடு புகுந்து திருடிய வாலிபருக்கு 3 மாதம் சிறை
திருச்சி, நவ.26: திருச்சியில் வீடு புகுந்து திருடிய வாலிபருக்கு 3 மாதம் சிறை தண்டனை விதித்து ரங்கம் மாஜிஸ்திரேட் நேற்று தீர்ப்பளித்தார். திருச்சி ரங்கம் பி-கிளாஸ், வடக்கு தெருவை சேர்ந்தவர் நீலாவதி. இவர் கடந்த 25.8.23 அன்று அதிகாலை தன் குடும்பத்தாருடன் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தார். அப்போது அவரது கணவர் வீட்டின் பின்பக்க கதவை சாதாரணமாக மூடிவைத்துவிட்டு கழிப்பறைக்கு சென்றிருந்தார். இந்த இடைவெளியில், வீட்டிற்குள் புகுந்த திருச்சி திருவாணைக்காவல் நரியன் தெரு, நெல்சன் தெருவை சேர்ந்த ராஜ்குமார்(21) என்பவர், வீட்டில் இருந்த ரூ.20 ஆயிரம் மதிப்பிலான ஹோம் தியேட்டர் மற்றும் செல்போன் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றார்.
இதுகுறித்து நீலாவதி கொடுத்த புகாரின் பேரில், ரங்கம் குற்றப்பிரிவு போலீசார் ராஜ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுகுறித்து ரங்கம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்து வந்த வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பில், குற்றவாளி ராஜ்குமாருக்கு 3 மாதம் சிறை தண்டனையும், ரூ.1000 அபராதம் விதித்து மாஜிஸ்திரேட் விஜயராஜேஷ் நேற்று தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் அரசு உதவி வக்கீல் வெங்கடேசன் ஆஜரானார்.