புதிய அனுபவ நிகழ்ச்சிக்காக விமானத்தில் சென்னை சென்ற 36 மாற்றுத்திறன் மாணவர்கள்
திருச்சி, நவ.26: புதிய அனுபவ நிகழ்ச்சிக்காக தஞ்சையை சேர்ந்த 36 மாற்றுத்திறன் மாணவர்களை திருச்சி கலெக்டர் சரவணன் வரவேற்று சென்னைக்கு விமானம் மூலம் அனுப்பி வைத்தார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் வரும் டிச.3ம்தேதி உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு புதிய அனுபவம் அளிக்க சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படும். இந்த ஆண்டு உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி தஞ்சாவூர் மாவட்ட அரசு பார்வைத்திறன் மற்றும் செவித்திறன் குறையுடையோர் அரசு சிறப்பு பள்ளி மாணவர்களை விமானத்தில் சென்னை அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
11ம் வகுப்பு பயின்று வரும் மாணவா்களை பாதுகாவலருடன் திருச்சி விமான நிலையத்திலிருந்து, விமானம் மூலம் சென்னை அழைத்து சென்று மெட்ரோ ரயில் அனுபவம், திரையரங்கத்தில் திரைப்படம் காணவைக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று வருகை தந்த தஞ்சாவூர் மாவட்ட அரசு சிறப்பு பள்ளியை சேர்ந்த 17 மாணவர்கள், 4 பார்வைத்திறன் சிறப்பாசிரியா்கள், செவித்திறன் குறையுடையோருக்கான பள்ளியின் 10 மாணவா்கள், 3 மாணவியா்கள், 2 சிறப்பாசிரியா்கள் என மொத்தம் 36 மாணவ, மாணவியா்களை திருச்சி மாவட்ட கலெக்டர் சரவணன் வரவேற்று, அவர்களை சென்னைக்கு வழியனுப்பி ைவத்தார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா்கள் அருள் பிரகாசம் (தஞ்சாவூர்), ரவிச்சந்திரன் (திருச்சி) மற்றும் பலா் கலந்து கொண்டனா்.