கீழக்குறிச்சி பகுதியில் அறுவடைக்கு தயாரான குறுவை நெற்பயிர் முளைக்க துவங்கியது
திருவெறும்பூர், அக்.26: திருவெறும்பூர் அருகேயுள்ள கீழக்குறிச்சி பகுதியில் அறுவடைக்கு தயாரான குறுவை நெல்மணிகள் மழைநீரில் மூழ்கி முளைப்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துனர்.திருவெறும்பூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சில தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்து பாதிப்பு ஏற்படுத்தி வருகின்றன.இந்நிலையில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள கீழக்குறிச்சி பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் குருவை சாகுபடிக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது.
மழைநீர் வடிய முறையான வடிகால் வசதிகள் இல்லாததால் தேங்கி நின்ற மழைநீரில் நெற்பயிர்கள் சாய்ந்து முளைத்து வருகின்றன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர்.ஏக்கருக்கு ரூ.25ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை செலவு செய்து குருவை சாகுபடிக்கு தயாரான நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் செய்வறியாது தவித்து வருகின்றனர். அதேபோல் நீரில் மூழ்கிய பயிர்களை இதுவரை எந்த அதிகாரியும் வந்து ஆய்வுக்கு செய்யவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.மேலும் இந்த பாதிப்பு குறித்து அதிகாரிகள் உரியஆய்வு மேற்கொண்டு விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.