சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி
திருச்சி, டிச.12: திருச்சி பழைய கலெக்டர் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முதல்நிலை சரிபார்ப்பு பணி நேற்று துவங்கியது. திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறை உள்ளது. இந்த பாதுகாப்பு அறையில் தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்கு பதிவு இயந்திரங்கள் உரிய பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில், 24 மணி நேர துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருக்கும். அவ்வப்போது, அங்கீகரிக்கப்பட்ட கட்சி நிர்வாகிகளின் முன்னிலையில், கலெக்டர் தலைமையில் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும்.
தற்போது, தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான தேர்தல் நெருங்கி வருகிறது. இதன் காரணமாக வாக்கு பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், வாக்கு பதிவு செய்யப்பட்டுவிட்டதை காட்டும் விவிபேட் கருவி உள்ளிட்டவைகளை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் முன்னிலையில் சரிபார்க்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளுக்கான தேர்தலுக்கு பயன்படுத்தப்படும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணி நேற்று முதல் தொடங்கியது.
முன்னதாக திருச்சி மாவட்ட கலெக்டர் சரவணன் தலைமையில், கலெக்டரின் தேர்தல் பிரிவு நேர்முக உதவியாளர் ெஹன்றி பீட்டர், திருச்சி வருவாய் கோட்டாட்சியர் சாலை தவவளன், தேர்தல் வட்டாட்சியர் சக்திவேல் முருகன் ஆகியோருடன், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் வாக்கு பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு அறை திறக்கப்பட்டது. அதன் பின்னர் வாக்கு பதிவு இயந்திரங்கள், இதுவரை பாதுகாப்பாக உள்ளது என்பது அனைவர் முன்னிலையிலும் உறுதி செய்யும் பணி நடைபெற்றது. அப்போது பாதுகாப்பு அறையில் திருச்சி மாவட்ட 9 தொகுதி தேர்தல் பயன்பாட்டிற்கான, 8237 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 3899 கட்டுப்பாட்டு கருவிகள், 4190 வாக்கு பதிவை சரிபார்க்கும் விவிபேட் கருவிகள் பாதுகாப்பாக இருப்பது உறுதி ெசய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமனம் செய்யப்பட்டுள்ள 11 பாரத் ஹெவி எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்(பெல்) மின்னணு பொறியாளர்கள், திருச்சி மாவட்ட தேர்தலுக்காக பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருக்கும் 16,326 கருவிகளை முதல் நிலை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டனர். முதல் நிலை சரிபார்க்கும் பணியில் தேர்தல் ஆணையத்தால் நியமனம் செய்யப்பட்டுள்ள 11 பெல் பொறியாளர்கள் தொடர்ந்து இந்த பணியினை மேற்கொள்வர் என்று கலெக்டர் சரவணன் தெரிவித்தார்.