7 ஆண்டுகால கோரிக்கை நிறைவேறியது கள்ளக்கம்பட்டி அரசுப்பள்ளி தரம் உயர்வு
துவரங்குறிச்சி, செப்.3: திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அடுத்த கள்ளக்காம்பட்டியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டதை அடுத்து மேல்நிலை வகுப்பு துவக்க விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டு தரம் உயர்த்தப்பட்டதற்கான ஆணையை பள்ளி தலைமை ஆசிரியரிடம் வழங்கினார். பின்னர் பேசியதாவது: இந்த அரசு பள்ளிக்கல்வித்துறைக்கு, பல்வேறு விதமான திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது. பல்வேறு நிலைகளில் புறக்கணிக்கப்படும் மனிதர்களை உயர்நிலைக்கு கொண்டு செல்வது கல்வி தான் இந்த அரசு சொல்லி விட்டு செல்வது அல்லது ஆனைத்தையும் முழுமையாக செய்து வருகிறது. வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ள நம் முதல்வர் கூட அங்கிருக்கும் தமிழர்களை சந்தித்து பேசும்போது, அரசு பள்ளிகளுக்கு உதவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். படிப்பில் மாணவர்கள் கவனம் செலுத்துங்கள் அதுதான் உங்களை உயர்த்தும் என்று கூறினார். பின்னர் வகுப்பறைக்குச் சென்று வகுப்பறைகளை திறந்து வைத்த அமைச்சர் மாணவர்களுக்கு மேல்நிலை வகுப்புகளை துவக்கி வைத்தார்.
காமராஜர் ஆட்சி காலத்தில் 1956 ல் இப்பள்ளி தொடங்கப்பட்டது. அதன் பின்னர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது பள்ளி உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வந்த நிலையில், தற்போது பள்ளி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்திய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும், பத்தாம் வகுப்பு வரை முடித்த மாணவர்கள் மேல்நிலை கல்வி பயில துவரங்குறிச்சி, புத்தாநத்தம் மற்றும் பன்னாங்கொம்பு பகுதிகளுக்கு சென்று வந்த நிலையில் பள்ளி நேரத்தில் பேருந்து கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர்.தற்போது தங்கள் ஊரிலேயே மேல்நிலைப்பள்ளி வந்து விட்டதால் மாணவர்களின் சிரமம் குறையும் என்ற பெற்றோர்கள் கடந்த 7 ஆண்டுகளாக கோரிக்கையை தற்போது தமிழக அரசு நிறைவேற்றி தந்துள்ளதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.விழாவில் மணப்பாறை எம்எல்ஏ அப்துல் சமது, பண்ணப்பட்டி கோவிந்தராஜன், ஒன்றிய செயலாளர்கள் சின்னஅடைக்கண், செல்வராஜ், பழனியாண்டி, தாசில்தார் பால காமாட்சி, பிடிஓக்கள், நிஜஸ்டண்ட் ஜோ, சக்திவேல், பள்ளி தலைமையாசிரியர், உதவி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.