பட்டதாரி ஆசிரியர்கள் 47 பேருக்கு பணிமாறுதல்
தர்மபுரி: தர்மபுரி முதன்மை கல்வி அலுவலகத்தில், கடந்த 1ம்தேதி முதல் ஆசிரியர் பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு ஆன்லைன் கலந்தாய்வு நடந்து வருகிறது. தர்மபுரி முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திரா முன்னிலையில், ஆன்லைன் மூலம் கடந்த 1ம் தேதி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்குள் பணி மாறுதல் கலந்தாய்வு நடந்தது. 2ம் தேதி வெளி மாவட்ட மாறுதல் கலந்தாய்வும், 3ம் தேதி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வும் நடந்தது. மாவட்டத்தில் 31 அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாவட்டத்திற்கள் இடமாறுதல் குறித்து விண்ணப்பம் செய்திருந்தனர். ஆனால், தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக இல்லை என்பதால், தற்போது பணியாற்றி வரும் பள்ளிகளிலேயே பணியாற்ற அனுமதி பெற்றனர்.
அதே போல், 53 அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்தாய்வில் கலந்து கொண்டனர். இதில் 21 உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பணிமாறுதல் ஆணை வழங்கப்பட்டது. கடந்த 3ம் தேதி நடந்த கலந்தாய்வின் மூலம், தர்மபுரி மாவட்டத்தில் முதுகலை ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்று வெளி மாவட்டங்களுக்கு இடமாறுதலில் 17பேர் சென்றனர். கடந்த 4ம் தேதி முதுகலை ஆசிரியர்களுக்கு, மாவட்டத்திற்குள் பணிமாறுதல் நடந்தது. இதில் 476 முதுகலை ஆசிரியர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர். இதில் 32ஆசிரியர் பணி மாறுதலாக மாற்றுப்பள்ளிக்கு சென்றனர். 158 ஆசிரியர்கள் ஆப்சென்ட் ஆனார்கள். இதில், 290 ஆசிரியர்கள் பணிமாறுதலில் விருப்பம் இல்லை என்று கலந்தாய்வில் கலந்து கொள்ளவில்லை.
கடந்த 11ம் தேதி, அரசு பள்ளிகளில் பணியாற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வில், 11 உடற்கல்வி ஆசிரியர்கள் மாவட்டத்திற்குள் பணி மாறுதல் பெற்றனர். நேற்று பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடந்தது. 125 பணியிடத்திற்கு 814 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். இதில் 47பேர் இடமாறுதல் பெற்றனர். 486பேர் பங்கேற்கவில்லை. 281பேர் இடம் மாற்றத்திற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை. இதுவரை தர்மபுரி மாவட்டத்தில் நடந்த கலந்தாய்வில், 190பேர் பணியிடம் மாறுதல் பெற்றுள்ளனர். ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக இந்த கலந்தாய்வு நடந்தது.