பெரம்பலூர் மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் குரூப் 2, 2ஏ ேபாட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள்
பெரம்பலூர்,ஜூலை 23: பெரம்பலூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ மற்றும் மத்திய மாநில அரசுகளால் நடத்தப்படும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பொது பாடப்பிரிவு வகுப்புகள் இன்று 23ம்தேதி முதல் தொடங்கப்படவுள்ளது - மாவட்டக் கலெக்டர் அருண்ராஜ் தகவல். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது: பெரம்பலூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டல் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்பொழுது டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வில் சார் பதிவாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் போன்ற 600-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் அறிவிக்கப் பட்டுள்ளது.
இப்பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு வருகிற செப்-28 நடைபெறவுள்ளது. மேலும், மத்திய அரசு,மாநில அரசு, பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் முப்படைகளின் போட்டித் தேர்வுகளுக்கான ஆட்சேர்ப்பு முகமைகளால் வெளியிடப் படும் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் (LIC,AAO,IB,EPFO, ASST,COMMANDANT..,) பொதுவாக உள்ள பாடங்களான பொது அறிவு (வரலாறு, புவியியல், பொருளாதாரம், அறிவியல், அரசியல் அறிவியல்…) நுண்ணறிவு, திறனறிவு, காரணவியல், மொழி அறிவு (தமிழ்/ஆங்கிலம்) ஆகிய பாடப்பிரிவுகளுக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்விற்கும் பயிற்சி வகுப்புகள், பெரம்பலூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டல் மையத்தில் இன்று 23ம் தேதி புதன் கிழமை முதல் தொடங்கப் படவுள்ளது.
இப்பயிற்சி வகுப்பில் திறனறி பலகை வசதியுடன் கூடிய வகுப்பறைகள், வாரத்தின் அனைத்து வேலை நாட்களிலும் பயிற்சி வகுப்புகள் நடைபெறும், போட்டித் தேர்வர்களுக்கு தேவையான அனைத்து சமச்சீர் மற்றும் பாடப் புத்தகங்களுடன் கூடிய நூலக வசதி உள்ளது. வாராந்திர மாதிரித் தேர்வுகள் நடத்தப் படும். பாடத்திட்டத்தின் படி வகுப்புகள் எடுக்கப்படும். எனவே, பெரம்பலூர் மாவட்டத்தைச் சார்ந்த பட்டப் படிப்பு முடித்த வேலை நாடுநர்கள் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டல் மையத்தினை அணுகி தங்களை பதிவுசெய்து இப்பயிற்சி வகுப்பில் கலந்து பயன்பெறலாம். மேலும், விவரங்களுக்கு 94990 55913 என்ற அலுவலக அலைபேசி எண்ணை தொடர்புகொண்டு பயன்பெறுமாறு மாவட்டக் கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.