திருவொற்றியூர் 13வது வார்டில் இ-சேவை மையம் இடமாற்றத்தால் 3 கி.மீ அலையும் பொதுமக்கள்
பிறப்பு, இறப்பு, வருமான சான்றிதழ், பதிவு பட்டா வரிகட்டுதல், பட்டா பெயர் மாற்றம் போன்ற பல்வேறு வகையான பதிவுகளுக்கும், சான்றிதழ் பெறவும் இந்த இ-சேவை மையத்தை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்தநிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் பெரிதும் பயன்பட்டு வந்த இந்த இ-சேவை மையம் இங்கிருந்து மண்டல அலுவலகத்திற்கு மாற்றப்பட்டது. இதனால் பொதுமக்கள் தங்களுடைய தேவைகளுக்காக சுமார் 3 கிமீ தூரம் பயணித்து எல்லையம்மன் கோவில் தெரு அருகே உள்ள இ-சேவை மைய அலுவலகத்திற்குச் செல்ல வேண்டிய உள்ளது.
இதனால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக முதியோர் மற்றும் கர்ப்பிணிகள் இ-சேவை மையத்திற்குச் சென்று வரும்போது மிகவும் சிரமப்படுகின்றனர். இதையடுத்து இங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்ட இ-சேவை மையத்தை மீண்டும் 13வது வார்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று வார்டு கவுன்சிலர் சுசீலாராஜா, திருவொற்றியூர் மண்டலக்குழு கூட்டத்தில் மாநகராட்சி உதவி ஆணையரிடம் பலமுறை கோரிக்கை விடுத்து வருகிறார்.
ஆனால் பல்வேறு காரணங்களை கூறி மீண்டும் இடமாற்றம் செய்யப்படாமல் உள்ளது. இதனால் தொடர்ந்து பொதுமக்கள் இ-சேவை மையத்திற்காக அலைய வேண்டியுள்ளது. எனவே மாநகராட்சி உயர் அதிகாரிகள் பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் உடனடியாக இ-சேவை மையத்தை மீண்டும் 13வது வார்டில் இருந்த இடத்திலேயே கொண்டு வந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.