அறுந்து கிடந்த மின்கம்பியில் மின்சாரம் தாக்கி விவசாயி பலி இறந்த பசுவை தொட்டபோது சோகம் கலசப்பாக்கம் அருகே
கலசப்பாக்கம், அக்.30: கலசப்பாக்கம் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த பசுமாடு பரிதாபமாக பலியானது. இதனை கவனிக்காமல் பசுமாட்டை தொட்ட விவசாயியும் மின்சாரம் தாக்கி இறந்தார். வடகிழக்கு பருவமழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதேபோல், நேற்று முன்தினம் இரவும் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில், துரிஞ்சாபுரம் அடுத்த வடபுழுதியூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி பழனி(60) என்பவர் வீட்டின் வெளியே இருந்த பசுமாட்டை கொட்டகையில் அடைக்க சென்றார்.
அப்போது, அங்கு அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் பசுமாடு மின்சாரம் பாய்ந்து இறந்து கிடந்தது. இதை கவனிக்காத பழனி, மாட்டை தட்டி எழுப்ப முயன்றுள்ளார். அப்போது, அவர் மீதும் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த கலசப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான விவசாயி பழனிக்கு சின்னபொன்னு என்ற மனைவியும் 3 மகன்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மின்சாரம் தாக்கி விவசாயி மற்றும் பசுமாடு பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.