நிலுவை வரிகளை நாளைக்குள் செலுத்தாவிட்டால் கடைகளுக்கு சீல் செங்கம் நகராட்சி உத்தரவு
செங்கம், ஆக.30: நிலுவை வரிகளை நாளைக்குள் செலுத்தாவிட்டால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என செங்கம் நகராட்சி உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகராட்சி கடந்த 3மாதங்களுக்கு முன்பு தரம் உயர்த்தப்பட்டது. நகராட்சிக்கு சொந்தமான புதிய பஸ் நிலையம் மற்றும் பழைய பஸ் நிலையம் மற்றும் பல்வேறு இடங்களில் வணிக வளாகங்கள், கடைகள் உள்ளது. இங்கு கடை வைத்துள்ள வியபாரிகள் பலர் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி, வாடகை மற்றும் குத்தகை போன்றவை ரூ.2 கோடிக்கு மேல் நிலுவை வைத்துள்ளனர்.
நகராட்சி அடிப்படை கட்டமைப்புகள் மற்றும் மின்கட்டணம், ஊழியர்கள் சம்பளம் என பல்வேறு நிலைகளில் நிதிஆதாரம் தேவைப்படுகிறது. இதனால் செங்கம் நகரில் நிலுவையில் உள்ள வரி பாக்கித்தொகையை நகராட்சி வங்கிக்கணக்கில் செலுத்தி உரிய ரசீதை பெற்றுக்கொள்ளவேண்டும். அத்தியாவசிய தேவையை கருதி முறையாக நகராட்சி செலுத்த வேண்டிய பாக்கியை நாளைக்குள் (31ம் தேதி) செலுத்தவேண்டும். தவறும் பட்சத்தில் 1ம் தேதி வரி வாடகை, குத்தகை செலுத்தாத கடைகளுக்கு ‘சீல்’ வைத்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதுமட்டுமின்றி குத்தகை காலங்களை ரத்து செய்து புதிதாக குத்தகை விடப்பட்டு நகராட்சிக்கு வருவாய் பெருக்கும் சூழ்நிலை ஏற்படும் என நகராட்சி ஆணையாளர் பாரத் தெரிவித்துள்ளார்.