பொதுமக்களின் தேவையறிந்து தீர்வு காணப்படும் கூட்டத்தில் கலெக்டர் தர்ப்பகராஜ் பேச்சு திருவண்ணாமலையில் சிறப்பு வார்டு சபை கூட்டம்
திருவண்ணாமலை, அக். 28: திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உட்பட்ட 39 வார்டுகளில் நேற்று சிறப்பு வார்டு சபை கூட்டம் நடந்தது. அதில், அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி அலுவலர்கள் கலந்துகொண்டு, பொதுமக்களின் ேகாரிக்கைகளை கேட்டறிந்தனர். கூட்டத்தில், குடிநீர் வழங்கல், தெரு விளக்கு பராமரிப்பு, சாலை வசதி, மழைநீர் வடிகால்வாய் பராமரிப்பு, பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள், தூய்மைக்கான மக்கள் இயக்கம் செயல்பாடுகள், மாநகர பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் உள்ளிட்டவை குறித்து பொதுமக்களிடம் கலந்துரையாடல் நடந்தது. மேலும், மாநகராட்சி சார்பில் நிறைவேற்றப்பட்ட பணிகள் குறித்து விளக்கினர். அதோடு, வார்டுகளில் செயல்படுத்த வேண்டிய பணிகள் குறித்த கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இந்நிலையில், திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உட்பட்ட 39வது வார்டில் அருணகிரிபுரம் முதல் தெருவில் வார்டு சபை கூட்டம் நேற்று மேயர் நிர்மலாவேல்மாறன் தலைமையில் நடந்தது. மாநகராட்சி ஆணையாளர் செல்வபாலாஜி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் கலெக்டர் தர்ப்பகராஜ் கலந்துகொண்டு பேசியதாவது: மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் வசிக்கும் பொதுமக்களிடமிருந்து கருத்துகள் மற்றும் ஆலோசனைகள் பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக, வார்டு அளவிலான சிறப்பு கூட்டம் மாவட்டம் முழுவதும் நடக்கிறது. உள்ளாட்சி பகுதிகளில் மக்களுடைய தேவைகளை அறிந்து, அதற்கான தீர்வுகளை உள்ளாட்சி அமைப்புகள் மூலம் விரைந்து மேற்கொள்வது இக்கூட்டத்தில் முக்கிய நோக்கமாகும். மேலும், உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகளுக்கும், மக்களின் கள தேவைக்கு இடையே இருக்கிற இடைவெளியை குறைந்து, வெளிப்படை தன்மையை உருவாக்குவதற்கு இக்கூட்டம் பெரிதும் பயன்படும்.
எனவே, தங்களுடைய பகுதிகளின் தேவைகளையும், நிறைவேற்ற வேண்டிய பணிகளையும் அரசுக்கும், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும் தெரிவிக்க இக்கூட்டத்தை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து, 39வது வார்டில், மரநாய்கன் குட்டையை தூர்வாரி சீரமைத்தல், மணியாரி தெரு தொடக்கப்பள்ளி மற்றும் திருக்கோவிலூர் சாலையில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கு கூடுதல் கழிப்பறை வசதிகள் ஏற்படுத்துதல், தேவையான இடங்களில் புதிய மின் கம்பங்கள் அமைத்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், தூய்மை அருணை ஒருங்கிணைப்பாளர் ப.கார்த்திவேல்மாறன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கண்ணமங்கலம்: கண்ணமங்கலம் பேரூராட்சியில் நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறை சார்பாக நாகநதிக்கரை அங்காளம்மன் கோயில் வளாகத்தில் வார்டு சபா சிறப்பு கூட்டம் நேற்று நடந்தது. பேரூராட்சி துணைத்தலைவர், பேரூராட்சி துணைத்தலைவர் வி.குமார் தலைமை தாங்கினார். இளநிலை உதவியாளர் நித்யா, வரித்தண்டலர் இந்திரா முன்னிலை வகித்தார். கணிணி ஆபரேட்டர் செல்வி வரவேற்றார். செயல் அலுவலர் முனுசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொதுமக்கள் கோரிக்கை மற்றும் ஆலோசனைகளை கேட்டறிந்தார். கூட்டத்தில் பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதேபோல் ஈஸ்வரன் கோயில், வீரக் கோயில், அங்கன்வாடி மையம், முருகர் கோயில் வளாகத்தில் அந்தந்த வார்டு கவுன்சிலர்கள் தலைமையில் கூட்டம் நடந்தது.
பெரணமல்லூர்: பெரணமல்லூர் பேரூராட்சியில் அமைந்துள்ள 1, 2, 3, 7 வார்டுகளில் நேற்று தனித்தனியாக வார்டுசபா கூட்டம் சம்பந்தப்பட்ட பகுதி கவுன்சிலர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் பேரூராட்சி தலைவர் வேணி ஏழுமலை, கலந்து கொண்டு அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்தார். குறிப்பாக வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ள நிலையில் வார்டுகளில் மழைநீர் தேங்கும் பகுதிகளை கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுதல், வார்டுகளில் அடிப்படை வசதிகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதில் பேரூராட்சி எழுத்தர் தேவா, துப்புரவு மேற்பார்வையாளர் நாயகம் மற்றும் சம்பந்தப்பட்ட வார்டு கவுன்சிலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.