1200 மெட்ரிக் டன் உரம் கொள்முதல் தூத்துக்குடியில் இருந்து ரயிலில் வந்தது திருவண்ணாமலை மாவட்டத்திற்கு
திருவண்ணாமலை, அக். 28: திருவண்ணாமலை மாவட்டத்திற்கு 1200 மெட்ரிக் டன் உரம் தூத்துக்குடியில் இருந்து ரயிலில் வந்தது. திருவண்ணாமலை மாவட்டத்திற்கு தேவையான உரம் 1200 மெ.டன் தூத்துக்குடியில் இருந்து ரயில் மூலம் திருவண்ணாமலைக்கு நேற்று கொண்டுவரப்பட்டது. அதனை, வேளாண் இணை இயக்குநர் கண்ணகி மற்றும் வேளாண் அலுவலர் (தரக்கட்டுப்பாடு) அற்புதசெல்வி ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். அதைத்தொடர்ந்து, 668 மெ.டன் யூரியா, 230 மெ.டன் டிஏபி, 302.00 மெ.டன் அமோனியம் குளோரைடு உரங்கள் அனைத்து உர விற்பனை நிலையங்களுக்கும் பிரித்து அனுப்பப்பட்டது, மேலும், இதுகுறித்து வேளாண் இணை இயக்குநர் கண்ணகி தெரிவித்ததாவது: நடப்பு மாதத்திற்கு தேவையான யூரியா 4751 மெ.டன், டிஏபி 4114 மெ.டன், பொட்டாஷ் 1360 மெ.டன், சூப்பர் பாஸ்பேட் 1520 மெ.டன் மற்றும் காம்ப்ளக்ஸ் 9382 மெ.டன் உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகள் உர விற்பனை நிலையங்களுக்கு ஆதார் எண்ணுடன் சென்று மண்வள அட்டை பரிந்துரையின்படி பயிருக்கு தேவையான உரங்களை மட்டும் விற்பனை முனைய கருவிமூலம் ரசீது பெற்று பயன்பெறலாம். தனியார் மற்றும் கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில், அரசு நிர்ணயித்த விலையைவிட கூடுதலான விலைக்கு விற்பனை செய்வது அல்லது இதர இடுபொருட்களை வாங்க வேண்டும் என நெருக்கடி கொடுப்பது போன்ற புகார்கள் உறுதி செய்யப்பட்டால் உர கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.