தென்பெண்ணை கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை சாத்தனூர் அணையில் கூடுதல் உபரிநீர் திறப்பு
திருவண்ணாமலை, நவ.27: சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், தென்பெண்ணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருவண்ணாமலை கலெக்டர் தர்ப்பகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணையில் இருந்து, அணையின் ஒழுங்குமுறை விதிகளின்படி கடந்த 12.9.2025 அன்று முதல் கட்ட மற்றும் 22.10.2025 அன்று இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, நீர்வரத்திற்கு ஏற்ப உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர்ந்து, நேற்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 1,450 கனஅடி நீர் வெளிேயற்றப்பட்டு வந்தது.
சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,180 கன அடியாக உள்ள நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் நாளை (28ம் தேதி) முதல் 3 நாட்களுக்கு சாத்தனூர் அணை நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணையில் இருந்து நேற்று காலை 10 மணி முதல் வினாடிக்கு 2,500 கனஅடி வரை உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. மேலும், நீர்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையின் அளவினை பொறுத்தும், சாத்தனூர் அணைக்கு மேலே உள்ள அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவை பொறுத்தும் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு மேலும் அதிகரிக்கலாம். எனவே, தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் உள்ள மக்கள் ஆற்றில் இறங்கவோ, கடக்கவோ கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.