காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து
திருவண்ணாமலை, செப். 27: காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகையை அவதூறாக பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து திருவண்ணாமலையில் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் எஸ்சி துறை சார்பில், திருவண்ணாமலை காமராஜர் சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. மாநில பொதுக்குழு உறுப்பினர் குணசேகரன் தலைமை தாங்கினார்.
அப்போது, காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகையை, அவதூறாக பேசிய, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து முழக்கமிட்டனர். மேலும், அவதூறாக பேசியதற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அப்போது எடப்பாடி படத்துக்கு செருப்பு மாலை அணிவித்து துடைப்பத்தால் அடிக்க முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.