பக்தர்கள் நெய் காணிக்கை செலுத்த சிறப்பு பிரிவு திருவண்ணாமலையில் ‘மகா தீபம்’ ஏற்ற
திருவண்ணாமலை, நவ. 25: கார்த்திகை தீபத்திருவிழாவில் மகா தீபம் ஏற்றுவதற்கான நெய் காணிக்கையை பக்தர்கள் செலுத்த வசதியாக, அண்ணாமலையார் கோயில் அருகே சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்தின் முக்கிய விழாவான, மகாதீப பெருவிழா வரும் 3ம் தேதி நடைபெறுகிறது. அன்று மாலை 6 மணிக்கு, 2,668 அடி உயர அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். அதையொட்டி, மகாதீபம் ஏற்றும் தீப கொப்பரை கோயிலில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வரும் 6ம் தேதி ஏற்றப்படும் மகா தீபம், தொடர்ந்து 11 நாட்களுக்கு பக்தர்களுக்கு காட்சிதரும். மகா தீபம் ஏற்ற 4,500 கிலோ நெய், 1500 மீட்டர் திரி பயன்படுத்தப்படுகிறது.
அதற்காக, ஆவின் நிறுவனத்திடம் இருந்து ஏற்கனவே 4,500 கிலோ தூய நெய் கொள்முதல் செய்யப்பட்டு கோயிலில் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மகாதீபத்திற்கு நெய் காணிக்கையை பக்தர்கள் செலுத்த வசதியாக, அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் அடுத்துள்ள திட்டிவாசல் பகுதியில் சிறப்பு நெய் குடம் காணிக்கை பிரிவு நேற்று தொடங்கப்பட்டது. அதில், நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் நெய் குடத்தை காணிக்கையாக அளித்தனர்.
மேலும், நெய் காணிக்கையை பணமாக செலுத்தும் பக்தர்களின் வசதிக்காக, ஒரு கிலோ நெய் ₹250, அரை கிலோ நெய் ₹150, கால் கிலோ ₹80 என ரொக்கமாகவும் காணிக்கை பெறப்படுகிறது. எனவே, நெய் காணிக்கையை பணமாக அல்லது காசோலை, வரைவோலையாக செலுத்த விரும்பும் பக்தர்கள் கோயில் 3ம் பிரகாரத்தில் காட்சி மண்டபத்தில் செயல்படும் சிறப்பு பிரிவில் செலுத்தலாம். அதோடு, கோயில் இணையதளத்தை பயன்படுத்தி ஆன்லைன் பண பரிவர்த்தனை மூலம் நெய் காணிக்கை செலுத்தும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.