பைக் மீது லாரி மோதி 2 வாலிபர்கள் பலி மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை செங்கம் அருகே பரிதாபம்
செங்கம், செப்.25: செங்கம் அருகே பைக் மீது மினிலாரி மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பரிதாபமாக பலியாகினர். படுகாயம் அடைந்த மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த உச்சிமலைகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர்கள் கல்லூரி மாணவன் லோகேஷ்வரன்(21), ஆக்டிங் டிரைவர் குமார்(28) மற்றும் முத்துக்குமார். நண்பர்களான இவர்கள் 3 பேரும் நேற்று காலை திருவண்ணாமலைக்கு பைக்கில் சென்றனர். தொடர்ந்து, புதுச்சேரி- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கண்ணக்குருக்கை கிராமம் வழியாக சென்றபோது எதிரே திருவண்ணாமலையில் இருந்து குப்பம் நோக்கி சென்ற மினிலாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து இவர்களது பைக் மீது மோதியது. இதனால் 3 பேரும் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த லோகேஸ்வரன், குமார் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். முத்துக்குமார் படுகாயம் அடைந்தார்.
அவ்வழியாக சென்ற பொதுமக்கள் இதுகுறித்து உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து படுகாயம் அடைந்த முத்துக்குமாரை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில், தகவலறிந்த பாச்சல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து லோகேஸ்வரன், குமார் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து இன்ஸ்பெக்டர் சாந்தி வழக்கு பதிந்து விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய மினிலாரி டிரைவரை வலைவீசி தேடிவருகிறார். சாலை விபத்தில் நண்பர்கள் இருவரும் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.