பெரிய மேளம் இசைக்கலைஞருக்கு கலைமாமணி விருது கிராமிய கலைகள் பிரிவில் தேர்வு திருவண்ணாமலையை சேர்ந்த
திருவண்ணாமலை, செப்.25: திருவண்ணாமலையை சேர்ந்த பெரியமேளம் இசைக்கலைஞருக்கு தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது பெரும் கலைஞர்களின் பட்டியலை நேற்று அரசு வெளியிட்டது. அதன்படி, இயல், இசை, நாடகம், நாட்டியம், திரைப்படம், கிராமிய கலைகள், இசை நாடகம் உள்ளிட்ட பிரிவுகளில் 30 கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்பட உள்ளது. இந்நிலையில், திருவண்ணாமலை அடுத்த பாப்பம்பாடி கிராமத்தை சேர்ந்த பெரிய மேளம் இசைக்கலைஞர் முனுசாமி(68), கிராமிய கலைகள் பிரிவில் கலைமாமணி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, பாப்பம்பாடி ஜமா எனும் பெயரில் பெரிய மேளம் இசைக்குழுவை நடத்தி வருகிறார். டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தினவிழா அணிவகுப்பு, அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரின் பன்னாட்டு கலைவிழா, தமிழ்நாடு முற்போக்கு கலைஞர்கள் சங்க கலைப்பயணங்கள், சென்னை சங்கமம் கலை விழா மற்றும் கலை பண்பாட்டுத் துறை சார்பில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளில் பெரிய மேளம் இசை நிகழ்ச்சி நடத்திய அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார். மேலும், இளைய தலைமுறையினருக்கு பெரிய மேளம் இசைப்பது தொடர்பாக பயிற்சியும் அளித்து வருகிறார். பாண்டிச்சேரி பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் பெரிய மேளம் கலையை இடம்பெற செய்ததில் இவரது பங்கு முக்கியமானது. இந்நிலையில், கலைமாமணி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள பெரிய மேளம் இசைக்கலைஞர் முனுசாமிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.