வாலிபர்களை கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் 2 பேர் கைது பைக்கை வழிமறித்து தடுத்து நிறுத்திய தகராறில்
ஆரணி, அக். 23: ஆரணி அடுத்த 12 புத்தூர் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன். இவரது மகன் ரகுவரன்(23), இவரது நண்பர்களான அதேபகுதியை சேர்ந்தவர்கள் ஸ்ரீநாதன்(24), கதிரவன்(24). இவர்கள் மூன்று பேரும், கடந்த 18ம் தேதி தீபாவளிக்கு துணி எடுப்பதற்காக வீட்டில் இருந்து பைக்கில் ஆரணி நோக்கி வந்துள்ளனர். அப்போது, ஆரணி அடுத்த சேவூர்-சிறுமூர் சாலையில் உள்ள டாஸ்மாக் கடை அருகே ஆரணி டவுன் பெரியார் நகரை சேர்ந்தவர்கள் டில்லிகணபதி, பாபு, அம்பேத்கர் நகர் ஜெனின், பையூர் ரகுபதி ஆகிய 4 பேரும், மது குடித்துவிட்டு, அவ்வழியாக செல்லும் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டார்களாம். அவ்வழியாக பைக்கில் வந்த ரகுவரன் மற்றும் ஸ்ரீநாதன், கதிரவன் வந்த பைக்கை வழிமறித்து டில்லிகணபதி அவரது நண்பர்கள் தடுத்து நிறுத்தி ஆபாசமாக பேசி திட்டி தகராறில் ஈடுபட்டார்களாம். இதனால், ரகுவரன் அவரது நண்பர்கள் எதற்காக எங்கள் பைக்கை தடுத்து நிறுத்துகிறீர்கள் என தட்டிக் கேட்டுள்ளனர்.
இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த டில்லி கணபதி, பாபு, ஜெனின், ரகுபதி ஆகியே 4 பேரும் சேர்ந்து, அவர்கள் மூவரையும் அருகில் இருந்த கட்டையை எடுத்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்தது 4 பேரும் அங்கிருந்து தப்பியோடினர். படுகாயமடைந்தவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆரணி தாலுகா போலீசில் ரகுவரன்(23), கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த ஜெனின்(20), மற்றும் ரகுபதி(20) இருவரையும் நேற்றுமுன்தினம் கைது செய்து, ஆரணி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள டில்லி கணபதி, பாபு ஆகிய இருவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.