செய்யாறு அருகே ‘மச்சான்’ என அழைத்த தனியார் கம்பெனி ஊழியருக்கு கத்தி வெட்டு சிறுவன் உட்பட 3 பேர் கைது
செய்யாறு, செப்.22: செய்யாறு அருகே பைக்கில் சென்றவர்களை ‘மச்சான்’ என அழைத்த தனியார் கம்பெனி ஊழியருக்கு கத்தி வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். செய்யாறு அடுத்த நாட்டேரி பகுதியை சேர்ந்தவர் நேதாஜி(28). செய்யாறு சிப்காட் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் செல்போனில் தனது வீட்டின் அருகே பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது, அவ்வழியாக பைக்கில் சென்ற 3 பேரை பார்த்து, தெரிந்தவர்கள் போல் இருந்துள்ளதால் `டேய் மச்சான்' என அழைத்தாராம். இதனால் அந்த 3 பேரும், பைக்கை நிறுத்திவிட்டு அங்கு வந்துள்ளனர். ‘யாரை மச்சான்’ என அழைக்கிறாய்? எனக்கேட்டு வாக்குவாதம் செய்து சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும், மறைத்து வைத்திருந்த கத்தியால் நேதாஜியை வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டனர்.
இதில், படுகாயம் அடைந்த நேதாஜியை பெற்றோர் மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில் செய்யாறு டிஎஸ்பி கோவிந்தசாமி, தூசி இன்ஸ்பெக்டர் ஜெகன்னாதன், பிரம்மதேசம் சப்- இன்ஸ்பெக்டர் தட்சணாமூர்த்தி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், நேதாஜியை வெட்டியவர்கள் பிரம்மதேசம் கிராமத்தை சேர்ந்த செல்வம்(19), பனமுகை கிராமத்தை சேர்ந்த இமயவர்மன்(19) மற்றும் 17 வயது சிறுவன் என தெரியவந்தது. அவர்கள் 3 பேரையும் கைது செய்து, கத்தியை பறிமுதல் செய்தனர். இச்சம்பவத்தை தொடர்ந்து முன்னெச்சரிக்கையாக நாட்டேரி பகுதியில் 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.