10ம் வகுப்பு தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் மதிப்பெண் சான்றிதழ் பெற வாய்ப்பு அரசுதேர்வுகள் உதவி இயக்குநர் தகவல் கடந்த 2019 முதல் 2022ம் ஆண்டு வரை
திருவண்ணாமலை, செப்.14: கடந்த 2019ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை 10ம் வகுப்பு தனித்தேர்வு எழுதியவர்கள் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ள மூன்று மாதம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, திருவண்ணாமலை அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் மணிமாலா தெரிவித்திருப்பதாவது: இடைநிலை பொதுத் தேர்வை (10ம் வகுப்பு) நேரடியாக எழுதும் தனித்தேர்வர்களின் மதிப்பெண் சான்றிதழ்கள், தேர்வு முடிவு வெளியிடப்பட்டதும் நேரடியாக தேர்வெழுதிய தேர்வு மையங்களில் வழங்கப்படுகிறது. தேர்வு மையங்களில் வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழ்களை, சம்பந்தப்பட்ட தனித்தேர்வர்கள் பெற்றுக் கொள்ளப்படாமல் நிலுவையில் உள்ள மதிப்பெண் சான்றிதழ்கள், ஒரு மாதம் கழித்து அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் பெற்று பாதுகாப்பாக வைக்கப்படும்.
திருவண்ணாமலை, அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலக ஆளுகைக்குட்பட்ட திருவண்ணாமலை மற்றும் செய்யாறு கல்வி மாவட்டங்களிலிருந்து இடைநிலை பொதுத் தேர்வினை கடந்த மார்ச் 2019 முதல் ஆகஸ்ட் 2022ம் ஆண்டு வரையிலான பருவங்களில் தனித்தேர்வர்களாகத் தேர்வெழுதியவர்களில் தேர்வு மையங்களில் சான்றிதழ் பெறாதவர்களின் மதிப்பெண் சான்றிதழ்கள் மீண்டும் திருவண்ணாமலை அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் பெறப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. மதிப்பெண் சான்றிதழ் விநியோகிக்கப்பட்ட தேதியிலிருந்து இரண்டாண்டுகள் கழித்து, தேர்வர்களால் உரிமை கோரப்படாத மதிப்பெண் சான்றிதழ்கள் அழிக்கப்படுவது வழக்கமான நடைமுறையாகும்.
எனவே, கடந்த 2019 மார்ச் மாதம் முதல் 2022 ஆகஸ்ட் வரையிலான பருவங்களில் இடைநிலை பொதுத் தேர்வெழுதி இதுவரை மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் விண்ணப்பத்துடன் இணைத்து பெறப்பட்ட பள்ளி மாற்றுச் சான்றிதழ் பதிவுத்தாள் ஆகியவற்றை பெறாத தனித்தேர்வர்களுக்கு தற்போது வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மூன்று மாதக் காலத்திற்குள் தேர்வெழுதியதற்கான நுழைவுச் சீட்டுடன், திருவண்ணாமலை முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் செயல்படும் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் அணுகியோ அல்லது மதிப்பெண் சான்றிதழ் கோரும் கடிதத்துடன் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டு மற்றும் ரூ.45 அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட சுயமுகவரியிட்ட உறை ஆகியவற்றை அனுப்பியோ தபால் மூலம் பெற்றுக் கொள்ளலாம். மூன்று மாதங்கள் கழித்து சான்றிதழ்கள் அழிக்கப்படும். அதன் பின்னர் சான்றிதழ்கள் பெற விரும்புவோர் இரண்டாம்படி சான்றிதழுக்கு உரிய கட்டணம் செலுத்தி ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.