நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் 325 இருதய நோயாளிகளுக்கு உயர் சிகிச்சை கலெக்டர், எம்பி பங்கேற்பு வந்தவாசி அடுத்த தெள்ளாரில்
வந்தவாசி, செப்.14: வந்தவாசி அடுத்த தெள்ளாரில் நடந்த நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாமினை கலெக்டர் தர்ப்பகராஜ், எம்பி எம்.எஸ்.தரணி வேந்தன், எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமார் தொடக்கி வைத்தனர். இதில் 325 இருதய நோயாளிகள் மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டனர். வந்தவாசி அடுத்த தெள்ளார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடந்தது. கலெக்டர் தர்ப்பகராஜ் தலைமை தாங்கினார். திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி முதல்வர் மோகன் காந்தி, இணை இயக்குனர் கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். செய்யாறு சுகாதார மாவட்ட அலுவலர் சதீஷ்குமார் வரவேற்றார்.
இதில் ஆரணி எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன், எம்எல்ஏ அம்பேத்குமார் ஆகியோர் கலந்து கொண்டு முகாமினை தொடங்கி வைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கி பேசினர். முகாமில் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி, ஆரணி, செய்யாறு வந்தவாசி அரசு மருத்துவமனை மற்றும் திருவண்ணாமலை அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் உள்ளிட்ட 150 மருத்துவர்கள் கொண்ட குழுவினர் கலந்து கொண்டு 240 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஸ்கேன் பரிசோதனை, 325 இருதய நோயாளிகளுக்கு இசிஜி பரிசோதனை, 275 மாற்றுத்திறனாளிகளுக்கு பரிசோதனை, 470 நபர்களுக்கு எலும்பு சம்பந்தமான சிகிச்சை மற்றும் பரிசோதனை, 340 நபர்களுக்கு பார்வை குறைபாடு குறித்து கண் பரிசோதனை என 2,175 பேருக்கு பரிசோதனை செய்தனர்.
மேலும் இருதய பரிசோதனை செய்யப்பட்ட 325 நபர்களுக்கு உயர் சிகிச்சை பெறுவதற்காக திருவண்ணாமலை, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக சான்றிதழ் வழங்கப்பட்டது. முகாமில், ஒன்றிய செயலாளர்கள் ராதா, இளங்கோவன், சுந்தரேசன், தேசூர் பேரூராட்சி தலைவர் ராதா ஜெக வீரபாண்டியன், முன்னாள் ஒன்றிய செயலாளர் ராமு, தொழிலாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் கோபிநாதன், சுற்றுச்சூழல் அணி மாவட்ட துணைத்தலைவர் விநாயகமூர்த்தி, விவசாய அணி ஒன்றிய அமைப்பாளர் பட்டாபிராமன், மாவட்ட பிரதிநிதிகள் ராமலிங்கம், முத்துக்குமரன், சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.