திருட்டு பைக்குக்கு பெட்ரோல் எடுக்க சுவர் ஏறி குதித்த வாலிபருக்கு தர்ம அடி போலீசில் ஒப்படைப்பு ஆரணி அருகே நள்ளிரவில்
ஆரணி, அக்.12: ஆரணி அடுத்த நெசல்புதுப்பட்டு கிராமம், பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் வினோத்குமார்(38), இவர், ஆரணி-சேத்துப்பட்டு சாலையில் இருக்கும் வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்றுமுன்தினம் வழக்கம்போல் இரவு உணவு சாப்பிட்டு விட்டு குடும்பத்தினர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு ஒரு மணி அளவில், வினோத்குமாரின் வீட்டின் காம்பவுன்ட் சுவர் மீது அடையாளம் தெரியாத வாலிபர் இருந்துள்ளார். அப்போது வினோத்குமாரின் தாய் வள்ளியம்மாள் வெளியே வந்தபோது, அந்த வாலிபர் திடீரென கீழே குதித்து, அருகில் இருந்த பைக்கை தள்ளிக்கொண்டு வேகமாக ஓடினார். இதனால் அதிர்ச்சியடைந்த வள்ளியம்மாள் கத்தி கூச்சலிட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அந்தநபர் வள்ளியம்மாளை கல்லால் தாக்கிவிட்டு தப்பியோடினர்.
தாயின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த வினோத்குமார் அவரது தந்தை மற்றும் அக்கம், பக்கத்தினர் அந்த வாலிபரை விரட்டி பிடித்து கம்பத்தில் கட்டிவைத்து சரமாரியாக தாக்கி ஆரணி தாலுகா போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அவர் சேத்துப்பட்டு அடுத்த பெரணம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த கன்னியப்பன் மகன் பிரசாந்த்(26) என்பதும், ஆரணி டவுன் பகுதியில் பைக் திருடிக்கொண்டு தப்பி சென்றபோது, பைக்கில் பெட்ரோல் தீர்ந்ததால் வினோத்குமாரின் வீட்டின் அருகில் உள்ள பைக்கில் பெட்ரோல் எடுப்பதற்காக வீட்டு சுவர் மீது ஏறியதும் தெரியவந்தது. இதையடுத்து ஆரணி தாலுகா போலீசார் பைக்கை பறிமுதல் செய்து, பிரசாந்தை கைதுசெய்து, சிறையில் அடைத்தனர்.