எதிர்கால தலைமுறைக்காக உழைப்பவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு ஓட்டுக்காக திட்டங்களை தீட்டாமல்
திருவண்ணாமலை, அக்.12: ஓட்டுக்காக திட்டங்களை தீட்டாமல், எதிர்கால தலைமுறையின் நலனுக்காக உழைப்பவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் என அமைச்சர் எ.வ.வேலு பேசினார். திருவண்ணாமலை மாநகர திமுக சார்பில், நல்லவன்பாளையம் பகுதியில் கலைஞரின் 102வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது. ஒன்றிய செயலாளர் சந்திரன் தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் கார்த்திவேல்மாறன், பகுதி செயலாளர்கள் சு.விஜயராஜ், அ.கோவிந்தன், ந.சீனுவாசன், குட்டி க.புகழேந்தி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாநகர பகுதி செயலாளர் பா.ஷெரீப் வரவேற்றார்.
விழாவில், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது: நின்ற தேர்தல்களில் எல்லாம் வென்ற ஒரே தலைவர் கலைஞர். ஐந்து முறை முதல்வராக பணியாற்றிய பெருமைக்குரியவர். ஏழை, எளிய மக்கள் பயன்பெறுவதற்கான எண்ணற்ற திட்டங்களை தொடர்ந்து கலைஞர் நிறைவேற்றினார். தனியார் பஸ்களை தேசியமயமாக்கியது, குடிநீர் வடிகால் வாரியம், சிறப்பு பொது விநியோகத் திட்டம் என அவர் கொண்டு வந்த திட்டங்களால் தமிழ்நாடு வளம் பெற்றது. மகளிர் சுய உதவிக் குழுக்களை உருவாக்கி, பெண்கள் பொருளாதார தன்னம்பிக்கை உடையவர்களாக உருவாக காரணமாக இருந்தவர் கலைஞர்.
சமுதாயத்தில் மாபெரும் புரட்சியை கலைஞர் செய்தார். அண்ணாமலையார் கோயிலை தொல்லியல் துறை கையகப்படுத்த முயற்சித்தது. அதன் மூலம், கோயிலில் தினசரி நடைபெறும் வழிபாடு தடைபடும் ஆபத்து ஏற்பட்டது. கலைஞர் முதல்வரானதும், அண்ணாமலையார் கோயிலை தொல்லியல் துறையிடம் இருந்து மீட்டுக் கொடுத்தார். கொரோனா தொற்று தீவிரமாக இருந்த காலத்தில் முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். அவரது நிர்வாக திறமையால், மூன்றே மாதத்தில் தமிழ்நாட்டில் இருந்து கொரோனாவை விரட்டி அடித்தார். கொரோனா தொற்றினால் பாதிக்கப்படாமல் நாம் அனைவரும் உயிரோடு இருப்பதற்கு காரணம் முதல்வர் மு.க .ஸ்டாலின் தான் காரணம்.
கொரோனா தொற்று முதன் முதலில் வந்த போது, ஆட்சியில் இருந்தவர்களின் நிர்வாக திறமையின்மை காரணமாக பல உயிர்கள் பறிபோனது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு முதல்வராக பொறுப்பேற்றதும் நகை கடன் தள்ளுபடி, மகளிர் குழு கடன்களை தள்ளுபடி செய்தார். 1.16 கோடி மகளிருக்கு மாதம்தோறும் உரிமைத் தொகையாக ஆயிரம் ரூபாய் தாயுள்ளத்தோடு வழங்கி வருகிறார். புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் மூலம் மாதந்தோறும் ரூ 1000 வழங்கப்படுகிறது. முதியோர்கள் ரேஷன் கடைக்கு சென்று பொருட்களை வாங்க ஏற்படும் சிரமத்தை தவிர்க்க, தாயுமானவர் திட்டத்தை கொண்டு வந்திருக்கிறார். பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அன்பு கரங்கள் எனும் திட்டத்தின் மூலம் மாதம் ரூ.2000 வழங்குகிறார்.
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இது போன்ற திட்டங்கள் இல்லை. ஓட்டுக்காக திட்டங்களை கொண்டு வராமல் எதிர்கால தலைமுறையின் நலனுக்காக செயல்படுகிற ஈகை குணம் படைத்தவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். இந்த ஆட்சி பெண்களுக்கானது. ஆண்களை விட அதிகமான திட்டங்கள் பெண்களுக்கு நிறைவேற்றுகிறார். எனவே, இந்த ஆட்சிக்கு அனைவரும் உற்ற துணையாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில், மாநில மருத்துவ அணி துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், எம்பி சி.என்.அண்ணாதுரை, தலைமைச் செயற்குழு உறுப்பினர் இரா.தரன், மாவட்ட பொருளாளர் எஸ்.பன்னீர்செல்வம், மாவட்ட துணை செயலாளர்கள் பிரியா ப.விஜயரங்கன், தொமுச மாநில துணை செயலாளர் சவுந்தரராசன், பொன்முத்து, அவைத்தலைவர் கண்ணன், மாவட்ட அமைப்பாளர்கள் டிவிஎம் நேரு, ஏ.ஏ.ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.