தலைமுடியை பிடித்து இழுத்து தரையில் இடித்து மாமியாரை கொன்ற மருமகள் போலீசில் சரண்: வேட்டவலம் அருகே பயங்கரம் நள்ளிரவில் தூங்கியபோது கழுத்து நெரித்து
கீழ்பென்னாத்தூர், ஆக. 12: வேட்டவலம் அருகே மகளுக்கு நகை, பணம் கொடுத்ததில் ஏற்பட்ட தகராறில் மாமியாரை, மருமகளே கழுத்து நெரித்து தலைமுடியை பிடித்து தரையில் இடித்து கொன்று போலீசில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அண்ணா நகரை சேர்ந்தவர் காசிநாதன். இவரது மனைவி அய்யம்மாள்(79). இவர்களுக்கு ஜெயா, விஜயராணி என்ற 2 மகள்களும், பழனிவேல் என்ற மகனும் உள்ளனர். காசிநாதன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அய்யம்மாளின் 2 மகள்களுக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். மேலும் அரசு பஸ் டிரைவராக பணிபுரியும் பழனிவேல் தனது அக்கா ஜெயாவின் மகள் தேவி(39) என்பவரை, திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஜெயசித்ரா(15), தீபிகா(13) என்ற மகள்களும், சபரிவாசன்(9) என்ற மகனும் உள்ளனர். அய்யம்மாள், மகனுடன் வசித்து வந்த நிலையில், தன்னிடம் உள்ள நகை மற்றும் பணத்தை அடிக்கடி விஜயராணிக்கு மட்டும் கொடுத்து வந்ததாக தெரிகிறது.
இதுதொடர்பாக பேத்தியும் மருமகளுமான தேவிக்கும், அய்யம்மாளுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் அய்யம்மாள் சில நாட்களுக்கு முன்பு விஜயராணிக்கு மீண்டும் பணம் கொடுத்ததாக தெரிகிறது. இதையறிந்த தேவி நேற்றுமுன்தினம் தட்டிக்கேட்டுள்ளார். இதில் இவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அனைவரும் தூங்க சென்றனர். பழனிவேல் நேற்றுமுன்தினம் இரவு வேலைக்கு சென்றிருந்தாராம்.
இந்நிலையில் ஆத்திரம் அடங்காத தேவி நள்ளிரவு தூங்கிக்கொண்டிருந்த அய்யம்மாளின் கழுத்தை நெரித்தும், தலைமுடியை பிடித்து தரையில் இடித்தும் கொடூரமாக கொலை செய்துள்ளார். பின்னர் நேற்று அதிகாலை தேவி வேட்டவலம் காவல்நிலையத்திற்கு சென்று, நடந்த சம்பவத்தை கூறி சரண் அடைந்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அய்யம்மாளின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து தேவியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நகை, பணம் கொடுப்பதில் ஏற்பட்ட தகராறில் மாமியாரை, மருமகள் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.