வல்லபுரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேக திருப்பணி மேற்கொள்ள சிறப்பு பூஜை எம்பி, எம்எல்ஏ பங்கேற்பு பெரணமல்லூர் அருகே ரூ.66 லட்சத்தில்
பெரணமல்லூர், நவ.11: பெரணமலூர் அருகே வல்லபுரீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேக திருப்பணி மேற்கொள்ள நடந்த பாலாலயம் நிகழ்ச்சியில் எம்பி, எம்எல்ஏ கலந்து கொண்டனர். பெரணமல்லூர் அடுத்த வல்லம் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த சோழன் மன்னன் காலத்தில் கட்டப்பட்ட வல்லபுரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் கடந்த 2013ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து மீண்டும் திருப்பணிகள் நடத்தி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தமிழக இந்து சமய அறநிலைத்துறை சார்பில், திருப்பணி மேற்கொள்ள ரூ.66 லட்சம் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் கோயில் திருப்பணி நடைபெறுவதை முன்னிட்டு நேற்று கோயில் வளாகத்தில் பாலாலயம் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் எம்எல்ஏ பாண்டுரங்கன் தலைமை தாங்கினார்.
ஒன்றிய செயலாளர் ராமசாமி, மாவட்ட பிரதிநிதி சடகோபன், வட்டார மருத்துவ அலுவலர் அருண்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயல் அலுவலர் சரண்யா வரவேற்றார். இந்த விழாவில் ஆரணி எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன், வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமார் ஆகியோர் கலந்து கொண்டு திருப்பணி தொடங்குவதற்கான பாலாலய நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தனர். இதில் திருப்பணி மேற்கொள்ளப்படும் கோயில் ராஜகோபுரம், உள்மண்டபம் மற்றும் பிரகாரங்கள் உள்ளிட்டவற்றை அத்தி பலகையில் வரையப்பட்டு யாகசாலை அமைத்து வேள்வி பூஜை நடத்தி மகாபூர்ணாஹூதி நடைபெற்றது. இந்த விழாவில் கிராம பொதுமக்கள், பக்தர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.