லாரி- லோடு ஆட்டோ நேருக்கு நேர் மோதல் 2 பேர் படுகாயம்
செங்கம், நவ.11: செங்கம் அருகே லோடு ஆட்டோ- லாரி நேருக்கு நேர் மோதியதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். செங்கத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு நேற்று காலை லாரி சென்றது. முறையாறு அருகே திருவண்ணாமலை-பெங்களூர் சாலையில் சென்றபோது, எதிரே தஞ்சாவூரிலிருந்து டிஜிட்டல் பேனர்களை ஏற்றிக்கொண்டு திருப்பத்தூர் நோக்கி சென்ற லோடு ஆட்டோவும், லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த விபத்தில், லோடு ஆட்டோ நொறுங்கியது. இடிபாட்டில் சிக்கிய தஞ்சாவூரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் வெங்கடேசன் மற்றும் தர்மா ஆகிய 2 பேரும் படுகாயமடைந்தனர். அப்போது அவ்வழியாக சென்றவர்கள், இடிபாட்டில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த செங்கம் போலீசார் சம்பவ இடம் வந்து பொதுமக்களுடன் சேர்ந்து 2 பேரையும் மீட்டனர். பின்னர் அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் சிக்கிய லாரியின் டிரைவர் லாரியை விட்டுவிட்டு தப்பியோடிவிட்டார். விபத்து காரணமாக, அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து விபத்துக்குள்ளான வாகனங்களை போலீசார் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய லாரி டிரைவர தேடி வருகின்றன.