கட்டிட மேஸ்திரிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை திருவண்ணாமலை போக்சோ கோர்ட் தீர்ப்பு வந்தவாசி அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த
திருவண்ணாமலை, செப்.11: வந்தவாசி அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கட்டிட மேஸ்திரிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை போக்சோ கோர்ட் நேற்று தீர்ப்பளித்தது. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே உள்ள அருங்குணம் கிராமத்தை சேர்ந்தவர் பார்த்திபன் மகன் சதீஷ்(32), கட்டிட மேஸ்திரி. இவர் கடந்த 2018ம் ஆண்டு 8ம் வகுப்பு படித்து வந்த 15 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி தொல்லை கொடுத்துள்ளார். பின்னர், அந்த சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். மேலும், இதுகுறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என சிறுமியை மிரட்டியுள்ளார். இந்நிலையில், சிறுமிக்கு திடீரென கடும் வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அப்போது, அந்த சிறுமி 2 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. அதனால், அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், இதுதொடர்பாக வந்தவாசி மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், போக்சோ சட்டத்தின் கீழ் சதீஷை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை, திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அதன்படி, நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி காஞ்சனா, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கட்டிட மேஸ்திரி சதீசுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து பரபரப்பு தீர்ப்பு அளித்தார். தொடர்ந்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட சதீஷை போலீசார் கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். கைதான சதீசுக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர். இவர் மீது மற்றொரு போக்சோ வழக்கும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.