கட்டிட தொழிலாளி வீட்டில் 6 சவரன் திருட்டு போலீசார் விசாரணை களம்பூர் அருகே பட்டப்பகலில் துணிகரம்
ஆரணி, செப்.11: களம்பூர் அருகே பட்டப்பகலில் கட்டிட தொழிலாளி வீட்டின் பூட்டு உடைத்து 6 சவரன் நகைகள் மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், களம்பூர் அடுத்த புங்கம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ஜெகன்(36), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி சுகுணா. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை ஜெகன், அவரது மனைவி இருவரும் வழக்கம் போல் கட்டிட வேலைக்கு சென்றுள்ளனர். அவரது மகன், மகளும் வீட்டை பூட்டிக் கொண்டு பள்ளிக்கு சென்றுள்ளனர்.
பின்னர், மாலை வேலையை முடித்துவிட்டு கணவன், மனைவி இருவரும் வீட்டிற்கு வந்தனர். அப்போது, வீட்டின் பின்பக்கம் உள்ள கதவின் பூட்டு உடைத்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது அறையில் உள்ள பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ஆறரை சவரன் மற்றும் ரூ.10 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ஜெகன் அளித்த புகாரின்பேரில் களம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து நகை மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடிவருகின்றனர். பட்டப்பகலில் நடந்துள்ள இந்த திருட்டு சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.