ஆடு மேய்ந்ததை தட்டிக்கேட்ட விவசாயி மீது சரமாரி தாக்குதல் தம்பதிக்கு போலீஸ் வலை ஆரணி அருகே சோளப்பயிர்களை
ஆரணி, செப்.10: ஆரணி அருகே சோளப்பயிர்களை ஆடு மேய்ந்ததை தட்டிக்கேட்ட விவசாயி மீது சரமாரி தாக்குதல் நடத்திய தம்பதியை போலீசார் தேடி வருகின்றனர். ஆரணி அடுத்த மொரப்பந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம்(55), விவசாயி. இவர் அதே பகுதியில் உள்ள தனது நிலத்தில் சோளம் விதைத்துள்ளார். கடந்த 6ம்தேதி காவலுக்கு சென்றார். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி ஜனனி என்பவரின் ஆடுகள், சண்முகம் நிலத்தில் விளைந்திருந்த சோளப்பயிர்களை மேய்ந்ததாக தெரிகிறது. இதனால் சண்முகம் தட்டிக்கேட்டார். அப்போது, இருதரப்புக்கும் தகராறு ஏற்பட்டது. தகராறின்போது அங்கு வந்த ராஜேந்திரன், ஜனனியுடன் சேர்ந்து, சண்முகத்தை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த சண்முகத்தை, குடும்பத்தினர் மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து சண்முகம் மனைவி ஜெயசித்ரா ஆரணி டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரன், ஜனனி ஆகியோரை தேடி வருகின்றனர்.